குறள் 6 - கதை 6

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

விளக்கம்:

மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்

கதை:


ஒரு ஊரில் மனோகர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ஆடம்பரமாக வாழ ஆசை படுபவன். கண்களுக்கு பிடித்த பொருள்களையெல்லாம் வாங்கி வைப்பான்.அவன் செவிகளில் யாராவது அவனை விட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி விட்டார்கள் என தெரிந்தால் போதும் உடனே அதை எப்படியாது அடைய முயற்சிப்பான். மூக்கை துளைக்கும் வாசனை திரவியமும் வாய்க்கு ருசியான சாப்பாடு என ஐம்புலன்களையும் அடக்க தெரியாமல் வாழந்து வந்தான்.

அதே ஊரில் செல்வம் என்பவன் இருந்தான். தான் தினம் சம்பாதித்து வரும் பணத்தில் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வான். அவன் மனம் எப்பொழுதும் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை. 

மனோகரிடம் என்ன வசதி இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலும் மனதில் திருப்தி என்பது இருந்ததில்லை. இந்த ஊரில் தன்னை விட யாரும் உயர்ந்து விடுவார்களோ என்கிற அச்சத்துடன் இருப்பான்.இரவில் நிம்மதி இருக்காது. திருடன் வந்து விடுவானோ யாரும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்கிற அச்சத்திலே வாழ்ந்து வந்தான். 

ஆனால் செல்வம் நிம்மதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு கடவுளை தவிர மற்ற எதிலும் நாட்டமில்லை. பணம் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு அவன் வேலையை பார்ப்பான். ஐம்புலன்களும் அடக்கி ஆள தெரிந்தவன். இதனால் அவன் வாழ்வில் நிம்மதியை தவிர வேறு ஏதும் இல்லை.

அனால் மனோகர் எல்லாவற்றையும் ஆசை கொண்டு அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சுய நலத்துடன் சிந்தித்ததால் மன அமைதி இல்லாமல் தவிக்கிறான். ஐம்புலன்களையும் அடக்கி ஆள தெரியாமல் இன்று பல வியாதிகளுடன் போராடி கொண்டிருக்கிறான்.


எனவே நாமும் நம்முடைய பேராசைகளை துறந்து நம் வருமானத்திற்கேற்ப ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி  வாழ்வோமாயின் வாழ்வின் நிம்மதி நிலையை அடையலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11