திருக்குறள்
முன்னுரை :
திருக்குறள் என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். "திரு" என்பது தமிழில் மரியாதையையும் மேன்மையையுங் குறிக்கும் ஒரு சொல். இஃது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கௌரவமான, அழகான" என்று பலவாறு பொருள்படும் வடமொழிச் சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல்லாகும். "திரு" என்ற சொல்லுக்கு 19 வெவ்வேறு பொருள்கள் உண்டு. குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள். தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகிப் பின்னர்க் "குறள்" என்றானது. அஃதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்". இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதித் "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. மிரான் வின்சுலோவின் கூற்றுப்படி, ஓர் இலக்கியச் சொல்லாகக் "குறள்" என்பது ஈரடி கொண்ட, முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது. சுருங்கக் கூறின், திருக்குறள் என்பது "தெய்வீக ஈரடிப்பாக்கள்" என்று பொருட்படும்.
எவ்விதத்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியர் உரியியலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும்,அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளக்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளக்கிக்கொள்ளவில்லை என்பதேயாகும்.
பிற பெயர்கள்
தமிழ்க் கலாச்சாரத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நூல் திருக்குறள். இவ்வுண்மை இந்நூலின் பன்னிரு பாரம்பரியப் பெயர்களான
- "திருக்குறள்" (புனிதமான குறள்),
- "உத்தரவேதம்" (இறுதி வேதம்),
- "திருவள்ளுவம்" (ஆசிரியரின் பெயர்),
- "பொய்யாமொழி" (பொய்க்காத சொற்கள்),
- "வாயுறை வாழ்த்து" (சத்தியமான பாராட்டு),
- "தெய்வநூல்" (தெய்வீகப் புத்தகம்),
- "வள்ளுவமாலை" (ஆசிரியர் கோர்த்த மாலை),
- "முப்பால்" (மூன்று பிரிவு/பகுப்பு),
- "தமிழ்மறை" (தமிழ் வேதம்),
- "தமிழ்மனு நூல்" (தமிழ் நீதிநூல்),
- "திருவள்ளுவப் பயன்" (ஆசிரியரால் விளைந்த பயன்),
- "பொதுமறை" (பொதுவான வேதம்)
ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படுகிறது.குறளானது, ஈரடிகளில் உலகத் தத்துவங்களைச் சொன்னதால், இஃது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது வான்மறை என்றும் உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.
இலக்கிய மரபில் திருக்குறள் சங்க நூல்கள் வரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக